என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, April 10, 2010

என் பின்னால் ஓடிவரும் புகைவண்டி

என் பின்னால் ஓடி வருகிறது
ஒரு புகைவண்டி.
எப்பொழுதும் இரவின் பாதியை புசித்துப் பழகிய கனவு
அந்த புகைவண்டியை செலுத்தவும் பழகியிருக்கிறது.

என் அவசரத்தை சிறுதும் பொருட்டாதபடி
இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆயிரம் பாலங்களும்
ஆயிரம் மலை வளைவுகளுமாக
நான் துரத்தப் பட்டுக்கொண்டே இருக்கிறேன்.
இரவு இரவாக.
பொழுதை ஒரு பொழுது துரத்தி
காலம் ஓடுவதைப் போல.

என் கையில் என்னை வளர்த்த பூமி
வெறும் எச்சில் இலையாகக் கிடக்கிறது.
நிலவைக் கழித்த நாட்களைப் போல
என் தோழர்கள் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பார்களா?
மிளகாய் அரைத்து கண்களுக்குள் பூசுவதைப்போல
உயிரோடு நிலம் அங்கலாய்க்கிறது.
நிம்மதியாக விடிய.

தண்டவாளங்களில் தோற்றுப் போன
வாழ்வின் அர்த்தங்கள் புதைக்கபட்டு
தலையைத் தேடும் பெண்களும்
கற்பின் உறவும்
நாளைய பராயங்களை உராய்ந்தன.

நான் வேகமாக ஓடிக்கொண்டிருந்த போது
புகைவண்டியின் பெட்டிகளில்
அநீதிகள் பாடிக்கொண்டிருந்தன.

நான் துரத்தப் பட்டுக்கொண்டே இருக்கிறேன்.
இரவு இரவாக

ஒரு குருவியின்
குருனல் சொண்டும்
பஞ்சு உடம்பும் என்னை வாட்டியெடு;கின்ற
ரொட்டியாக இன்னும் நிஜத்தில்.
நான் ஏவிய கல் ஒன்று
குருவியின் வாழ்வை முடித்துக் கொண்ட செய்தி
வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
என் கனவைவிடவும்.
இதுவும் என்பின்னால் ஓடிவரும் புகைவண்டியாக.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா