என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, February 6, 2012

மேகம் சொல்வது

என்னை வேறொரு திசைக்கு இழுத்தச் செல்கிறது
காற்று.
பனியறியாது.
வெயிலறியாது
குணமறியாது
குலமறியாது
நான் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன்.

நான்
மிகவும் அழகாக வட்டமிட்டுக்கொண்டிருந்தேன்
அல்லது கலைந்து உலாவிக்கொண்டிருந்தேன்
வானவில்லையும் வடிவமைத்துக்கொண்டே இருந்தேன்.
இந்தப் பூமியைப் பற்றி கவனமாக யோசித்துக்கொண்டும் இருந்தேன்.

என் இருளுக்குள்
மழைக் குஞ்சுகளைச்
சுமந்தபடியே திரிந்தேன்.

நாளை என் ஈரலிப்பில்
நகக் காளான்களும் முளைக்கும்
தகரைகளும் முளைக்கும்.

Saturday, April 16, 2011

பூஜ்யம்




சூரியன் ஒரு பூஜ்யம்
முழுச் சந்திரனும் ஒரு பூஜ்யம்
இந்தப் பூமியும் ஒரு பூஜ்யமே
நானும்
நீயும் பூஜ்யம்கள் தான்
ஆக,
நம்மைச் சூழவுள்ள எல்லாமே
பூஜ்யம்கள்.
நம்மை மண்ணுக்குள் அடக்கிவிட்டு
திரும்ப
தூரத்தே நின்று பார்க்கின்றபோது
ஒவ்வொருவருடைய முகமும்
பூஜ்யம்களாகவே தெரியும்.

Saturday, April 9, 2011

பசுந்தரை



என்னுடைய தோட்டத்தில்
மரங்கள் வளர வேண்டாமென்றும்
பூக்கள் மலர வேண்டாமென்றும்
குயிலோசை கேட்க வேண்டாமென்றும்
கட்டளை இட்டாய்.

உன்னுடைய தோட்டத்தில்
மரங்கள் வளர்வது
பூக்கள் மலர்வது
குயிலோசை கேட்பது
எதற்காக?

என் தோட்டத்தில்
மரங்கள் வளராவிட்டாலும்
பூக்கள் மலராவிட்டாலும்
குயிலோசை கேட்காவிட்டாலும்
பசுந்தரைதான்.
நல்ல மழையும் கிடைக்கிறது
நல்ல காற்றும் வீசுகிறது.

Monday, March 28, 2011

இணைப்பு



ஓட இயலாத வண்டியை
உருட்ட முயன்றேன்
மாடுகள் மறுத்துப் படுத்தன.

மாடுகள் எழுந்தபோது
மாடுகளை நோவினேன்
சில்லுகள் கழன்றன

ஒன்றில்லாமல் ஒன்றுமே
இனிக்காது
ஒன்றில்லாமல் ஒன்றுமே
செல்லாது.

வித்தியாசம்



அழகாக ஓடிக்கொண்டிருக்கும் நதியில்
நானும் நீங்களும் மெய் மறந்திருப்போம்
மனித உடல்களும்
செத்த புட்களும்
தும்புகளும் தூசுகளும்
ஒதுங்குவதும் தான்

நமக்குள்ளும்
ஓர் அழகிய நதி
எப்பவும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
பலதும் சுமந்தபடியாக.

வெறும் நிழலாக இல்லாமல்



இப்போதைக்கு
நிலவு சுதந்திரமாக விழுகின்ற பூமியில்
எனக்குள்
சுதந்திரப்படுகின்றது கனவும்.

தீப்பிளம்பின் எச்சங்களோ
துப்பாக்கி ரவைகளின் பலிபீடங்களோ
கொலைக்காட்சியின் சித்திரங்களோ
கனவாவதில்லை.

ஆயினும் என்ன.
உண்மையை
நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றன
மனிதன் வாழும் இடங்களில்
சேமிக்கப்பட்டிருக்கும் நிகழ்வின் நிஜங்கள்.

ஒரு காலம்
இந்நிலத்தின் சுவடுகளில் நியாயம் முளைக்கும்.

Monday, January 10, 2011

வரும் ஆபத்துப் பற்றி


மழை பெய்தது
குட்டைகள் நிரம்பின
தவளைகள் சந்தோசமாய்க் கத்தின
ஆயினும் தவளைகள்
பாம்பின் வரவை அறியாதிருந்தன.
எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா